முன்னாயத்தத் திட்டமின்றி அருங்காட்சியகம் ஒன்றினை உருவாக்குதல்- Tamil
Share
முன்னுதாரணம் இல்லாத நிலையில் கொழும்பில் சமகால கலைக்கான அருங்காட்சியகம் ஒன்றினை எப்படி அமைக்கலாம் என்பதனை மீளக் கற்பனை செய்கிறார் ஷாமினி பெரேரா - சாத்தியப்பாடு மட்டுமே.
Byline: நம்ரதா தேவன்ஜீ

கலை யாருக்கானது? “இலங்கையைப் பொறுத்தவரை, மிகக் குறுகிய எண்ணிக்கை மக்களுக்கே கலை சென்றடைகிறது என்பதுடன் அதன் நோக்கம் பெரும்பாலும் விலை கொண்டே வரையறுக்கப்பட்டுள்ளது,” என ஷாமினி பெரேரா தெரிவிக்கிறார். பல் நூற்றாண்டு கலை வரலாற்றைக் கொண்ட ஒரு நாட்டிலே கலைக் கண்காட்சிகள் மிக அரிதானவையாகக் காணப்படுவதும் அண்மைக் காலம் வரை சமகால கலைக்கு என அர்ப்பணிக்கப்பட்ட அருங்காட்சியகம் ஒன்று கூட இல்லை என்பதும் வியப்பிற்குரியது. திறமை தடையாக இருந்திருக்குமோ எனின், ஒருபோதும் அப்படியில்லை; திறமை நிறைந்தது இலங்கை. “அருங்காட்சியகமே இல்லை என்பதுடன் அதற்கான பயிற்சியுமில்லை,” என அவர் குறிப்பிடுகிறார்.
கொழும்பின் நவீன மற்றும் சமகாலக்கலைக்கான இலங்கை அருங்காட்சியகத்தின் (MMCA) சிரேஷ்ட எடுத்தாளுநராகவும் அதன் செயற்திட்ட இயக்குநராகவும் மேம்பாட்டுத் தலைவராகவும் பணியாற்றும் ஷாமினி, விதிகளை மீள அமைப்பதில் தீவிரம் காட்டுகிறார். கலை ஆடம்பரப் பொருளல்ல என்பது அவர் வாதம்; கலையைப் கலாச்சாரப் பகிர்விடமாகக் கொள்கிறார். அவர் விவரிப்பது போல தொலைநோக்குடனும் எளிதாக்கும் தன்மை கொண்டதாகவும் அவரது பங்களிப்பு அமைகிறது: கலைஞர்களும் பார்வையாளர்களும் சமூகங்களும் வளமாக முன்னேறும் நிலைமைகளை உருவாக்கிக் கொண்டு அருங்காட்சியகத்தின் கலைப் பாதையையும் வடிவமைத்தல்.

பயமற்றதொரு குரல்
2019 ல் நிறுவப்பட்ட MMCA, பாரம்பரிய அருங்காட்சியகத்தை விட அதிகமாக செயல்பட ஆரம்பித்தது. வெறுமனே கலைப் படைப்புகளைக் காட்சிப்படுத்துதல் என்பதற்கும் அப்பால் சென்று நாடு முழுவதும் கலைக் கல்வியை வலுப்படுத்தும் அறிவினை மேம்படுத்தி, தொழில்முறை வலைப்பின்னல்களையும் உருவாக்குகிறது. ஆழமான மக்கள் பிரச்சினைகளைத் தெளிவாகக் காண்பிக்கும் கண்ணாடியாகக் கலையை மாற்றியமைக்கின்றன அதன் கண்காட்சிகள் மற்றும் நிகழ்ச்சிகள்: 88 ஏக்கர்ஸ் (30 நவம்பர் 2023 – 7 ஜூலை 2024) எனும் கண்காட்சியானது வீட்டுவசதி, கட்டுப்படி மற்றும் சமூகம் போன்ற விடயங்களைப் பிரதிபலிப்பதாக மினெட் டி சில்வாவின் கண்டி வடபுலுவ வீட்டுத் திட்டத்தை மறுபரிசீலனை செய்வதாக அமைய, 2025 மே மாதம் இடம்பெற்ற வழக்கறிஞர் பவானி ஃபொன்சேகாவின் உரையானது இலங்கையில் நிலவும் காணிப் பிரச்சனைகளை வெளிப்படுத்தியது. இச் செயற்திட்டங்கள் அருங்காட்சியகத்தை நடுநிலையான ஒரு கண்காட்சி இடமாக அல்லாமல் உரையாடலுக்கான ஒரு தளமாக நிலைநிறுத்துகின்றன.
அரசு நிதியில் MMCA தங்கியிருக்காததால், மேற் சொல்லப்பட்ட நிகழ்ச்சித் திட்டங்களில் காணப்படும் நிலம் மற்றும் அரசியற் பிரச்சினைகள் போன்று ஏனைய நிறுவனங்கள் தவிர்க்கக் கூடிய விடயங்களை ஆராயக் கூடியதாக உள்ளது. “கலைஞர்கள் போராளிகள். தனியார் நிறுவனமாக இருப்பதனால் முயற்சிகளைப் பரிசோதித்துப் பார்க்கவும் துணிந்து செயற்படவும் சமூக, அரசியல் யதார்த்தனக்ளுக்குக் குரல் கொடுக்கவும் முடிகிறது,” என ஷாமினி விவரிக்கிறார். இருப்பினும் அச் சுதந்திரத்தோடு பொறுப்பும் சேர்ந்து கொள்கிறது: விவாதத்தை உறுதி செய்வது புரிதலுக்கு வழிவகுப்பதுடன் சமூகங்களை மதித்து தேவையின் அவசரத்தை உணர்த்தியும் நிற்கிறது.
இப் பொறுப்பு வெளிப்படைத்தன்மையிலும் பொறுப்புக் கூறலிலும் தங்கியுள்ளது. வளங்களைப் பயன்படுத்துவது குறித்து அனுசரணையாளர்களுடன் தெளிவாகச் செயற்படும் அருங்காட்சியகம் கலைஞர்களை நியாயமாகப் பிரதிநிதித்துவப்படுத்துவதுடன் பொருத்தமானதாகவும் அர்த்தமுள்ளதாகவும் இருக்கும் நிகழ்ச்சிகளில் அர்ப்பணிப்புடன் ஈடுபடுகிறது. அருங்காட்சியகள் எல்லாம் நிலையான நிதி நிலைமைக்கும் எடுத்தாளல் பொறுப்புக்கும் இடையே உள்ள தளம்பல்களுக்கு ஊடாகச் சாதூரியமாகப் பயணிக்க வேண்டும் என்றாலும், MMCA இல் ஒருமைப்பாட்டில் சமரசமும் கிடையாது என்பதுடன் நடைமுறைப் போக்குப் பாணிகளுக்காகவோ அன்றி யாரையும் திருப்திப்படுத்தும் நோக்கிலோ கண்காட்சிகள் ஒருபோதும் வடிவமைக்கப்படுவதில்லை எனக் கூறுகிறார் ஷாமினி.

கல்விச் சேவை
“தனியார் நிதியுதவி பெற்றுக் கொள்வதால், எமது சேவை காரியவாதத்தோடு மட்டும் நின்று விடாது என்பதைக் காண்பிப்பது இன்னும் முக்கியமானதாக அமைவதுடன், பொது மக்களுடன் ஈடுபட்டுள்ள எமது பணி ஒருபோதும் தொடர்பை இழக்கக் கூடாது," என அவர் வலியுறுத்துகிறார். நேர்மையான இப் பரிமாற்றப் போக்கானது பார்வையாளர்களுடன் அருங்காட்சியகம் தொடர்பு கொள்ளும் அர்ப்பணிப்பு விதத்தை வழிநடாத்துகிறது. அத்துடன் அவர்களது படைப்புகள் பொருத்தமானதாகவும் அர்த்தமுள்ளதாகவும் இருக்கவும் வழிவகுக்கின்றது. அண்மைய ஆண்டுகளில், MMCA-வை ஒரு வகுப்பறையாக எடுத்துக் கொள்ள ஆசிரியர்களை ஊக்குவித்த MMCA பாடசாலை சார் கற்றலை ஆதரிக்கும் வளமாக அருங்காட்சியகம் மாறும் வகையில் மாணவர்களைக் காட்சியகங்களுக்குள் கொணர்ந்துள்ளது. சாதாரணதர அல்லது உயர்தர கலைக்கும் அப்பால் முன்னெடுக்கப்படும் இந்த அணுகுமுறையானது பரந்த கல்வி வளர்ச்சிக்குத் துணையான நிலைத்து ஆங்கிலம், வரலாறு அல்லது ஏனைய பாடங்களைப் பகுப்பாய்வுச் சிந்தனையோடு கற்பிப்பதை தீவிரமாக ஆதரிக்கிறது.
பார்வையாளர்களையும் சமூகத்தையும் பற்றிய MMCA ன் புரிதல் அவர்களை நிகழ்ச்சித் திட்டத்தின் பங்காளர்களாக எடுத்துக் கொள்ளும் அளவிற்கு அதிகரித்துள்ளது. அவர்களது அறிவும் கண்ணோட்டங்களும் கேள்விகளும் கண்காட்சிகள் மற்றும் நிகழ்ச்சிகளை வடிவமைக்கக் கூடியவையாக மாறியுள்ளன. அருங்காட்சியகம் இன்னும் உருவாக்கத்திலே தான் உள்லமையால் அது இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டியுள்ளது எனக் குறிப்பிடுகிறார் ஷாமினி. எதிர்வரும் திட்டங்கள் ஊடாகவும் அவற்றின் பணியில் அமர்த்தப்படவுள்ள குழுவினர் மூலமும் இப் புரிதலானது தொடர்ந்த வண்ணமிருக்கும்.

அணுகக் கூடியதாகக் கலையை மாற்றுதல்
பொதுமக்களுக்கான கலைக் கட்டமைப்புக் குறைவாக உள்ள ஒரு நாட்டில், கலைஞர்களை ஆதரிப்பது தொடக்கம் கொள்கை வடிவமைப்பு வரை “அனைத்தையும்” MMCA செய்ய வேண்டியுள்ளது என ஷாமினி பெரிதும் உணர்கிறார். இதனை இலகுவாக்கும் வகையில் உலகளாவிய கூட்டிணைவுள் மற்றும் உள்ளூர் பயிற்சி மூலம் திறனை MMCA அதிகரிக்கிறது. அவர்களது தொடரானது பொது மற்றும் தனியார் கலை அமைப்புகளில் உள்ள நிபுணர்களைக் கையாள, உரையாடல் மற்றும் மக்கள் ஈடுபாட்டு விசேடங்கத்துவம் ஆகியவை வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் உள்ள பயிற்சியாளர்களை மக்கள் உரையாடலிலும் பிணக்கைத் தீர்க்கவும் கருவியாக கலையைப் பயன்படுத்த வலுவளித்தன. இந்த ஆரம்ப முயற்சிகள் கலந்துரையாடல்களை நடைமுறைக்குக் கொணர்ந்தன. மற்றவர்கள் பணியைத் தொடர தயார்படுத்துகின்றன.
முன்னுதாரணத் திட்டங்கள் ஏதுமின்றிய நிலையில் MMCA அதற்கான விதிகளையும் வழிகாட்டும் கொள்கைகளையும் அமைத்துள்ளது. மற்றைய அருங்காட்சியகங்களைப் பின்பற்றாமல், பார்வையாளர்களின் அபிப்பிராயங்களைக் கேட்பதன் ஊடாகவும் கலைஞர்களின் கருத்துகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து அதிகளவில் வெளிக் கொணர்வதன் மூலமும் கலாச்சார இடைவெளிகளை நிரப்புவதன் வகையிலும் தனக்கான சூழமைவிலே முன்னேறியுள்ளது. இலவச பிரவேசம், நீண்ட நேரம் தங்கிப் பார்வையிடுவதற்கான சுதந்திரம் மற்றும் அழுத்தமில்லாத சூழல் ஆகியவை அருங்காட்சியகத்தை வரவேற்கத்தக்கதாக ஆக்குகின்றன. அருங்காட்சியகத்தின் முதலாவது பொது இடம் ஆடம்பரமானதொரு வீதியில் அல்லாமல் கொழும்பில் பரபரப்பான ஷொப்பிங் மோல் க்ரெஸ்கற் பூலவாடில் அமைந்திருந்தது. அங்கு பார்வையாளர்கள் எதேச்சையாகத் தமது நாளாந்த வாழ்க்கையின் பிரதிபலிப்பாகக் கலையைப் கண்டனர், சாதாரண, வழக்கத்திற்கு மாறான அந்த இடம் சாசுவாதமானது: “முறையான” அருங்காட்சியகங்களிற்கான விதிகளை அகற்றி, ஆர்வத்தை முன்னிலைப்படுத்தியது. கதவுகள் இல்லை, வரவேற்பு மேசை இல்லை, பார்வையாளர்கள் சுவாசிக்கவும் ஆராய்வதற்குமான ஒரு திறந்தவெளியாக அமைந்த அருங்காட்சியகம் MMCA.
“அப்படியே நின்று செல்ஃபி எடுப்பது, நீண்ட நேரம் பார்த்துக் கொண்டே இருப்பது, கேள்விகள் கேட்பது, எமது வருகை கல்வியாளர்களுடன் அளவளாவுவது, திரும்பப் பலமுறை வருவது எனத் தமது நாளாந்த வாழ்க்கையின் அடுத்தபடியாகவே அருங்காட்சியகத்தை மக்கள் பார்த்தனர்,” என ஷாமினி நினைவு கூர்ந்தார். மொழி மூலமாகவும் இவ் வரவேற்புக் கிடைத்தது. ஒவ்வொரு லேபிளும் உரையும் டிஜிட்டல் மூலமும் ஆங்கிலம், சிங்களம் மற்றும் தமிழில் உள்ளன. பல மொழியியல் குழுக்கள் உள்ள ஒரு நாட்டில், சுவரில் ஒருவரின் சொந்த மொழியைப் பார்ப்பது என்பது ஒருவரது சுய பிரச்சினையை அகற்றி, ஆழமான ஈடுபாட்டை ஊக்குவித்து, அப் படைப்புத் தமக்கான மரியாதைக்குரியது எனும் உணர்வை உருவாக்குவதற்கான ஒரு சக்தி வாய்ந்த வழியாகும். அருங்காட்சியகத்திற்கு யார் வரலாம், யார் வரக் கூடாது எனும் கருத்திற்குச் சவால் விடுக்கும் வகையில் பரந்தளவில் பார்வையாளர்களை வரவேற்பதை அருங்காட்சியகம் உறுதி செய்கிறது.
கட்டடக்கலை, சமூகம் அல்லது மொழியியல் என அனைத்து வகையிலும் உள்ள ஆழ் அடுக்குகளைப் பிரித்து அவற்றை இலகுவாகக் கலையாக வாழவும் அதனை உணரவும் அது பற்றிச் சிந்திக்கவும் மீண்டும் அதனை ஆழ்படுத்தவும் எனக் கலையை வடிவமைக்கிறது MMCA. இக் கற்றல்கள் நிரந்தர அருங்காட்சியகத்தை வடிவமைக்கும். விரைவில் ஆரம்பமாகவுள்ள அந்த அருங்காட்சியகத்தில் எமக்கானது எனும் உணர்வும் ஆராய்வதற்கான சுதந்திரமும் மையப் பொருளாக அமைவது உறுதி.
இலங்கையில் இதே போன்ற நடைமுறைகள்
தனது ஆரம்பகால பயணத்தை நினைவு கூர்ந்த அவர், 1980களிலும் 90களிலும் அருங்காட்சியகமானது கலை உலகத்திற்கு எதிராகக் காணப்பட்டதைக் குறிப்பிடுகிறார். “கலைஞர்களின் கருத்துகள் மதிக்கப்படாமலும் அவர்களைக் கண்டு கொள்ளாமலும் இருந்த நிலைப்பாடுகள் தான் என்னை வழிநடாத்தின. முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு, உலகம் வேறுபட்ட இடமாகக் காணப்பட்டது; இப் பிராந்தியத்தைச் (ஆசியா பசிபிக்) சேர்ந்த கலைஞர்களைப் பெரும்பாலும் யாரும் கண்டு கொள்வதில்லை.” இந் நிலைப்பாட்டை ஷாமினி மாற்றியமைக்க விரும்பினார். கலைஞர்களது கருத்துகளை எப்படி ஆதரிப்பது, பொதுமக்களுக்குக் கலை எப்படிக் கிடைக்கச் செய்வது என்பதுடன் நிலையான நிறுவனங்களிலிருந்து சுயாதீனமாக எப்படிச் செயற்படுவது என்பதை விளங்கிக் கொள்வது தான் சவாலாக அமைந்தது.
MMCA ல் அவரது பணிக்கு மேலதிகமாக, மக்களுக்குச் சேவௌ கிடைக்க வேண்டும் என்பதிலும் பிரதிநிதித்துவப்படுத்துவதிலும் அர்ப்பணிப்புடன் பணியாற்றிய ஷாமினியின் உழைப்பில் 2008 ஆம் ஆண்டில் உருவானது ரேக்கிங் லீவ்ஸ். சர்வதேச விநியோகத்திற்காகப் புத்தகங்களைத் தயாரிக்கக் கலைஞர்களை நியமித்த ஒரு சுயாதீன இலாப நோக்கற்ற நிறுவனமானம் இதுவாகும். அதன் சேவை ஊடாகவும் புத்தகமாக அதன் வடிவம் மூலமும் இவ் வெளியீடுகள் காட்சியகங்களின் தனிச்சிறப்பிற்கும் அப்பால் சென்று, உலகம் முழுவதும் உறுதியானதாகவும் அனைத்தும் உள்ளடக்கியதாகவும் கலை வியாபிக்க வழியமைத்தன.
இலங்கை உள்நாட்டுப் போரின் போது இடம்பெயர்ந்தவர்களின் வாய்மொழி வரலாறுகளைப் பதிவு செய்த சனாதனனின் The Incomplete Thombu (2012) மற்றும் கருத்து வேறுபாட்டின் ஊடகத்தையும் சிக்கலான வரலாறுகளையும் பட்டியலிட்டு கிடைக்கக் கூடிய, சுவாரஸ்யமான வடிவங்களாக மாற்றிய The A–Z of Conflict (2019) போன்ற படைப்புகள். இந்த ஜனநாயக வழிகாட்டல் ஊடாக வாசகர்கள், கலைஞர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கலாச்சாரப் பாதைகளைக் கண்டுணர்ந்து, அவற்றில் ஈடுபடவும் முடியும்; இல்லையெனில் எப்போதும் அவை கவனத்திற் சிக்க மாட்டாததாகவே அமையும்.
2013 ம் ஆண்டில், சனாதனன் மற்றும் அகிலன் ஆகியோருடன் இணைந்து ஷாமினி, சமகால கலை, கட்டிடக்கலை மற்றும் வடிவமைப்பிற்கான இலங்கை ஆவணக் காப்பகத்தை யாழ்ப்பாணத்தில் நிறுவினார். பல தசாப்த கால போரிலிருந்து இன்னும் மீண்டு வரும் ஒரு நகரத்தில் அமைந்துள்ள இக் காப்பகம், பொது வளமாகவும் கல்விக் களமாவும் செயல்படுகிறது; ஆராய்ச்சி, உரையாடல் மற்றும் பரிமாற்றத்தை எளிதாக்குகிறது. அனைவரும் சுயாதீனமாகவே செயற்பட்டாலும் மூவருக்கும் இடையிலான தொடர்பு மூலம் ஷாமினியின் எடுத்தாளல் நடைமுறை முன்னெடுக்கப்படுகிறது. இதன் மூலம் அருங்காட்சியகத்தை அதன் கட்டமைவுச் சூழலில் வேரூன்ற வைக்கும் MMCA ன் திட்டங்கள் மற்றும் முடிவுகளை வடிவமைக்க உதவுகிறது.

சர்வதேச அங்கீகாரத்தை நோக்கி
MMCA இலங்கையின் நிலைப்பாடு நுட்பமானது: தேசிய பொறுப்புடன் கூடிய ஒரு தனியார் அருங்காட்சியகம். சர்வதேச அங்கீகாரம் மகிழ்ச்சியான விடயம் தான். ஆனால் அதனை ஷாமினி எச்சரிக்கையுடன் அணுகுகிறார். “இலங்கையின் அனைத்து சமகால கலைகளையும் MMCA ‘பிரதிநிதித்துவப்படுத்துவதில்லை’ என்பது எங்களுக்குத் தெரியும். எமது நிலைப்பாடு எமக்குத் தரும் மகிழ்ச்சியை விட அதனை நாம் எவ் வண்ணம் பயன்படுத்துவது என்பதில் தான் அதிக ஆர்வமாக உள்ளோம்.”
இச் சவால் வரையறைகளுடன் ஆரம்பமாகிறது. இலங்கை கலைஞர் என்றால் நாட்டில் வாழ்ந்து வேலை செய்பவர்களா, அல்லது அவர்கள் வெளிநாட்டிலிருந்து வந்தவர்களாகவும் இருக்க முடியுமா? அவர்கள் இலங்கை கடவுச் சீட்டு கொண்டிருக்க வேண்டுமா, அல்லது புலம்பெயர்ந்தவர்கள் எனக் கொள்ள முடியுமா? அவர்களின் படைப்புகள் இலங்கையைத் தான் வெளிப்படையாகக் குறிப்பிட வேண்டுமா? “நிகழ்ச்சித் திட்டங்கள் ஊடாகத் தான் இக் கேள்விகளுக்குச் சிறந்த பதில் கிடைக்கும்,” என்பது அவர் வாதம். “எமது செயற்திட்டங்கள் ஊடாகவே நாம் இதனைக் கையாள்கிறோம், அவற்றின் ஊடாகப் பேச வைக்கிறோம். நிகழ்ச்சித்திட்டங்கள் எப்போதும் தொடர்ந்த வண்ணம் இருக்கும்; அவை நிலையானதாக இருக்காது, முன்னர் நிகழ்ந்தவற்றுக்கு பதிலளிக்கின்றன. என்னைப் பொறுத்தவரை, இலங்கையின் சமூகங்களதும் கலை நடைமுறைகளதும் யதார்த்தங்களில் அடித்தளத்திலே நாம் வழங்கும் படைப்புகளும் கதைகளும் அமைய வேண்டும் என்பதை உறுதி செய்வது முன்னுரிமைக்குறியது.”
அருங்காட்சியகத்தின் நோக்கம் பிரமிப்பு அல்ல, ஈடுபாடு. “மிரட்டலாகவோ அல்லது தகவல் சுமையாகவோ இல்லாமல் பிரமிப்பை ஊட்டி, மகிழ்ச்சி தந்து, உரையாடலின் மிக முக்கியமான அம்சத்தைத் தூண்ட விரும்புகிறோம். பார்வையாளர்கள் தாம் மீண்டும் எப்போது வருவது என நினைக்க வேண்டும், தாம் பார்த்த அனுபவத்தைப் பற்றி யாரிடம் சொல்லப் போகிறார்கள் என்பது தான் எமக்கு முக்கியம்,” எனக் கூறுகிறார் ஷாமினி. என்ன செய்ய வேண்டும் என்பது தெளிவு: இலங்கையில் கலை இனி தனிச் சிறப்பு உடையவருக்கு மட்டுமே என்பது ஒழிந்து, அதில் ஈடுபட விரும்பும் அனைவருக்குமானது என்பதை உறுதி செய்தல்.
---
*This article was translated from English to Tamil and Sinhala for Desi Art Mag Issue #2, courtesy MMCA Srilanka.